10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!
‘காலக்கணிதம்’ - நயம் பாராட்டல்
முன்னுரை:
தன் எழுத்தின் ஆற்றலையும், ஒரு கவிஞனின் சமூகப் பொறுப்பையும் ஆணித்தரமாக எடுத்துரைக்கும் கவிஞர் கண்ணதாசனின் ‘காலக்கணிதம்’ கவிதையில் அமைந்துள்ள இலக்கிய நயங்களைக் காண்போம்.
திரண்ட கருத்து:
“நான் காலத்தைக் கணித்துச் சொல்பவன்; கருவில் உள்ள பொருளுக்கு உருவம் கொடுப்பவன். இவ்வுலகில் நான் ஒரு புகழ்பெற்ற தெய்வம். பொன்னை விட விலைமதிப்பு மிக்கது என் சொல்லாகிய செல்வம். சரி என்று பட்டதை சொல்வது என் தொழில்; தவறு என்றால் எதிர்ப்பது என் வேலை. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களும் இறைவனுக்கும் எனக்கும் மட்டுமே தெரியும்” என்று கவிஞர் தன் ஆற்றலைப் பெருமையுடன் கூறுகிறார்.
மோனை நயம்:
செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனையாகும். இக்கவிதையில் மோனை நயம் சிறப்பாக அமைந்துள்ளது.
- கவிஞன் - காலக் - கணிதம் - கருப்படு
- புவியில் - புகழுடை - பொன்னினும் - பொருள்
- ஆக்கல் - அளித்தல் - அழித்தல் - அவனும் - அறிந்தவை
எதுகை நயம்:
செய்யுளில் அடியிலோ சீரிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகையாகும்.
- கவிஞன் - புவியில்
- இவைசரி - இவைதவறு
அணி நயம் (உருவக அணி):
உவமை வேறு, உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல், இரண்டும் ஒன்றே என்று கூறுவது உருவக அணியாகும். இக்கவிதையில் கவிஞர் தன்னைக் ‘காலக்கணிதம்’ என்றும், ‘புகழுடைத் தெய்வம்’ என்றும் உருவகப்படுத்தியுள்ளார். இது பாடலுக்கு ஆழத்தையும் கம்பீரத்தையும் தருகிறது.
சந்த நயம்:
இக்கவிதை எளிய சொற்களால், படிக்கப் படிக்க ஓசை இன்பம் தரும் வகையில் அமைந்துள்ளது. ‘வைப்பேன்’, ‘வேலை’, ‘தொழில்’ போன்ற சொற்கள் பாடலின் சந்தத்திற்கு மெருகூட்டுகின்றன.
முடிவுரை:
மேற்கண்டவாறு மோனை, எதுகை, உருவக அணி, சந்த நயம் எனப் பல நயங்களும் ஒருங்கே அமையப்பெற்று, இக்கவிதை கவிஞரின் ஆளுமையைப் பறைசாற்றுகிறது.